சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தேடப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.நாட்டின் 71-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு டெல்லி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா பேரணி மற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், தீவிரவாதிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி தவிர முப்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படங்களில் உள்ள தீவிரவாதிகள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.