தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரிப்பு: ஒன்றிய அரசு பதில்!
தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், “கருப்பை அகற்றுதல் கண்காணிப்புக் குழுக்கள் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையெனில், அதற்கான காரணங்கள் மற்றும் அரசு இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அதற்கான முன்மொழிவுகள் என்ன ?” என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், “தனியார் மருத்துவ மனைகளில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் பெண்களின் சம்மதம் பெறப்படாமலும், அதன் பக்க விளைவுகள் குறித்து அவர்களுக்குப் போதிய விளக்கம் அளிக்கப்படாமலும் நெறியற்ற முறையில் மேற்கொள்ளப்படுவது அதிகரித்து வருவதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள்; அத்தகைய தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஏதேனும் வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசாங்கம் வழங்கியிருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளையும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி ப்ரவின் பவார், “நெறியற்ற முறையில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய அரசு 2022 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது. அவை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை தொடர்பான கண்காணிப்புக் குழுக்களை மாநில/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவில் அமைப்பது உட்பட வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் தேசிய கருப்பை நீக்க கண்காணிப்பு குழு (NHMC) இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் நேஷனல் ஹெல்த் மிஷனின் கூடுதல் செயலாளர் மற்றும் பணி இயக்குநரின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
2019-2021 க்கு இடையிலான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5 ) இன் படி, தனியார் மருத்துவ மனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3% அதிகரித்துள்ளது. 2015-16 இல் (NFHS-4 ) அது 67.3% இருந்தது. 2019-2021 இல் அது 69.6% ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
மேலும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையில்லாத விதத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கறாராகப் பின்பற்ற அறிவுறுத்தி இந்திய அரசு 2022 அக்டோபர் 4 இல் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் என அமைச்சர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை அதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாக நிரப்புவதற்கு மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரி வழிவகை செய்யவேண்டும்.
* மாவட்ட அளவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களின் வரிசைப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவரது வயது, தொழில், முந்தைய மருத்துவ/அறுவை சிகிச்சை வரலாறு , கருப்பை நீக்கம் செய்ததற்கான காரணம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்ய மாட்டார்; குகு சமூகத்திடம் பேசிய அமித் ஷா!
* 40 வயதுக்குள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை முறையாக ஆய்வுசெய்யவேண்டியது மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரியின் கடமையாகும்.
* பொது மற்றும் தனியார் மருத்துவமனிகளில் உள்ள மருத்துவர்களுக்கு இதைப்பற்றி தேவையான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
* இவை தவிர, மாநில அளவிலான குழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றனவா என்பதை ஆராய மாவட்ட அளவிலான தரவுகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆய்வு செய்ய வேண்டும்.” ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி ப்ரவின் பவார் பதிலளித்துள்ளார்.