பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள் என பிரபலங்கள் பலரும் தங்களிடம் உள்ள கரன்சிகளை தங்கமாக மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடயில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்க கட்டிகள் நகைகள் சிக்கி வருகின்றன. மேலும் வருமானவரித் துறையினர் சோதனையை தீவிரப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் நடிகர் நடிகைகள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. ஐதராபாத்தில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 9ம் தேதிவரை மட்டுமே 470 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல டோலிவுட் ஹீரோவின் மனைவி மட்டும் ரூ.25 கோடிக்கு தங்கம் வாங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் தங்கம் வாங்குவதற்கான பில்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளன.
குறிப்பிட்ட நாளில் யாரெல்லாம் தங்கம் வாங்கினார்கள் என்பது குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அதேபோல் தரகர்கள் மூலம் வெளிநாட்டு கரன்சி மாற்றியவர்கள் விவரத்தையும் மத்திய அரசு திரட்டி வருகிறது. இதனால் திரையுலக பிரபலங்கள் பீதியடைந்துள்ளதாக் கூறப்படுகிறது.
