ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், வங்கியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் பணம் டெபாசிட் செய்த 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், 9 லட்சம் பேர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால், அவர்களை கட்டம் கட்டியுள்ளது வருமான வரித்துறை.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 50 நாளில் வங்கியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களை வருமான வரித்துறையினர் பட்டியலிட்டனர்.

கெடு முடிந்தது

‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகத்துக்கு இடமான வகையில், பணம் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரை கண்டுபிடித்து, அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்அஞ்சல் மூலம் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இம்மாதம் 15-ந்தேதிக்குள் அந்த பணம் குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தனர்.

5.27 லட்சம் பேர்

இதில் கடந்த 12-ந்தேதி வரை ஏறக்குறைய 18 லட்சம் பேரில், 5.27 லட்சம் பேர் தங்களின் பதிலையும், வருமானவரி ரிட்டன் விவரங்களையும், எஸ்.எம்.எஸ். மற்றும் மின் அஞ்சல் மூலம் அனுப்பிவிட்டனர்.

இதில் 5.27 லட்சம் பேர், ரூபாய் நோட்டு தடை காலத்தில் தாங்கள் வங்கியில் செய்த டெபாசிட் குறித்து 99.5 சதவீதம் கூறிவிட்டனர். இந்த டெபாசிட்கள் 7.41 லட்சம் வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யவில்லை

இதில் 4.84 லட்சம் வரி செலுத்துபவர்கள் வருமான வரித்துறையினரின் ‘இ-போர்ட்டலில்’ பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு மீண்டும் எஸ்.எம்.எஸ்.அனுப்பப்பட்டு பதிவுசெய்யக் கூறப்பட்டுள்ளது.

9 லட்சம் பேர் மீது சந்தேகம்

ஆனால், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்ட 18 லட்சம் வங்கிக் கணக்கு வைத்து இருப்பவர்களில் 9 லட்சம் பேர் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பதால், அவர்கள் மீது வருமான வரித்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

மார்ச் 31-க்கு பின் நடவடிக்கை

இப்போது மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா’ கருணை திட்டம் மார்ச் 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கணக்கு ஒப்படைத்தால், 50 சதவீதம் வரி, அபராதம், 25சதவீத தொகையை வட்டியில்லாமல் டெபாசிட் செய்வது போக, 25 சதவீதம் அளிக்கப்படும்.

ஆதலால், இந்த திட்டம் முடிந்தபின் தான், இந்த டெபாசிட் செய்தவர்கள் மீது மார்ச் 31-ந்தேதிக்கு பின்பே நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.