Illegal rail ticket sales ...
ரயிலில் பயணம் செய்வதற்கு, ஆன்லைன் மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொண்டு வருகிறோம். அதிகாரப்பூர்வமான ரயில் டிக்கெட்டுகளை, நாம் ஆன்லைன் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களை நாடியே பெற்று வருகிறோம்.
ஆனால் சிலர் சட்டவிரோதமாக, அதிகாரப்பூர்வமற்ற ரயில் டிக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது.
இதனை அடுத்து, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.11 கோடிக்கும் அதிகமான தொகையை ரயில்வே துறை வசூலித்துள்ளது.
சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் வழங்கப்படுவது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையும், வர்த்தகம் மற்றும் கண்காணிப்புத் துறையும் இணைந்து சோதனை நடத்தியது.
மும்பை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 80 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்புள்ள 21 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
ரூ.45,750 ரொக்கம், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், கணினி, ரசிதுப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 143-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
