டெல்லியில் கணவனின் கள்ளக் காதலை விட்டுவிட வேண்டும் என கேட்டுக் கொண்ட  மனைவியை 7 துண்டுகளாக வெட்டி அட்டைப் பெட்டியில் பார்சல் பண்ணி வீசிய கொடூர கணவனையும், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த இன்ஜீனியர்  சஜத் அலி அன்சாரி, பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அன்சாரியின்   போனுக்கு அடையாளம் தெரியாக ஜுகி என்ற பெண் தவறுதலாக ராங்கால் பேசியுள்ளார்.

இதைத் தொடர்நது அவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். பின்னர் வழக்கம் போல அந்த நட்பு காதலாக மலர்ந்தது. இதையடுத்து  கடந்த 2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமண வாழ்க்கை சில நாட்கள் சிக்கலின்றி  மிக மகிழ்ச்சியாக சென்றது. அதே நேரத்தில்  அன்சாரி வேலையில்லாமல் அவதிப்பட்டார். இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வாழ்க்கையை நடத்தவே அவர்கள்  கஷ்டப்பட்டனர். இதையடுத்து அன்சாரி மற்றும் ஜுகி ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் வேலைதேடி டெல்லிக்கு சென்று செட்டில் ஆகினர்.

டெல்லியில் சிறு சிறு வேலைகளை செய்த அன்சாரிக்கு அந்த பணிகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. குடும்பத்தின் வறுமை தொடர்ந்ததால் கணவன் -மனைவி இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து வந்த அவர், வீட்டுக்கு வருவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அன்சாரிக்கும், ஜூகிக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன், இருவருக்கும் மோதல் முற்றியுள்ள நிலையில் அன்சாரி, ஜூகியை அடித்து கொன்று விட்டார்.

இதையடுத்து அன்சாரி தனது நெருங்கிய உறவினர்கள் இருவரை உதவிக்கு அழைத்து,  மூன்று பேரும் சேர்ந்து ஜூகியின் சடலத்தை ஏழு துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த ஏழு அட்டைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வீசி எறிந்து விட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவே போலீசார் அந்த அட்டைப் பெட்டிகளை கைப்பற்றி பார்த்தபோது  அதில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இது தொடர்பாக விசாரணை  நடத்தியதில் அன்சாரி  தனது மனைவியை  7 துண்டுகளாக வெட்டி அட்டைப் பெட்டி அடைத்து காட்டுப் பகுதிக்குள் வீசியது  தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து  அன்சாரி மற்றும் அவரது உறவினர்கன் இரண்டு பேரை போலீசார்  கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.