இதனால் ஆத்திரம் அடைந்த நபர், திடீரென தான் கொண்டுவந்திருந்த கத்தியை வெளியில் எடுத்து அங்கிருந்த போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டான்.

உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும். இந்த கோயிலின் தலைமை பூசாரியாக உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இதன் காரணமாக இந்த கோயில் எப்போதும் போலீசார் பாதுகாப்பிலேயே இருக்கும். 

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 3) இரவு ஏழு மணி அளவில், மர்ம நபர் ஒருவர் கோஷங்களை எழுப்பிய படி கோயிலை நோக்கி ஓடி வந்தார். இவரது செயலை பார்த்த போலீசார், உடனடியாக கோயில் நுழைவு வாயிலுக்கு விரைந்து மர்ம நபரை கோயிலினுள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நபர், திடீரென தான் கொண்டுவந்திருந்த கத்தியை வெளியில் எடுத்து அங்கிருந்த போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டான்.

பலத்த காயம்:

மர்ம நபரின் தாக்குதலில் சிக்கிய இரு போலீசாருக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. கையில் கத்தி வைத்திருந்த காரணத்தால் மர்ம நபர் கோயிலின் வெளியில் கத்தி கூச்சலிட்டு வந்தார். மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீசாரும் தாக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பரபர சூழல் நிலவியது. 

பின் அங்கிருந்தவர்களில் சிலர் கீழே இருந்த கற்களை கொண்டு மர்ம நபரை தாக்க முயன்றனர். இதில் காயமுற்ற மர்ம நபர் நிலை தடுமாறியதை அடுத்து போலீசார் அவனை பிடித்து உடனடியாக கைது செய்தனர். கோரக்நாத் கோயில் வாயிலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐ.ஐ.டி. பட்டதாரி:

விசாரணையில் கையில் கத்தியுடன் ஓடி வந்த மர்ம நபரின் பெயர் அகமது முர்தசா அபாசி என்றும் அவர் 2015 ஆம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டி. மாணவர் என தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்து லேப்டாப், மொபைல் போன் மற்றும் டிக்கெட் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இவர் ஏன் இப்படி செய்தார் என்ற விவரங்களை அறிந்து கொள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

"இந்த விஷயத்தில் எந்த விதமான சந்தேகத்தையும் சாதாரணாக விட்டு விட முடியாது. இது தீவிரவாத நடவடிக்கையாகவும் இருக்கலாம். இந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பாஸ் இடம் இருந்து லேப்டாப், மொபைல் போன் மற்றும் டிக்கெட் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது," என கோரக்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி. பிரசாந்த் குமார் தெரிவித்தார். 

சிகிச்சை:

அபாசி தாக்கியதில் காயமுற்ற போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.