பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் கடும் விமர்சனம்

சண்டிகர், நவ. 16-

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருக்கும், ஏழைகளுக்கு மோடியின் ‘ஸ்ட்ராங் டீ’ கொடுத்தால், அவர்களுக்கு ‘அல்சர்’ வந்துவிடும். ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு திட்டமிடாதது, மனித நேயமற்றது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ‘சாய் பீ சார்ச்சா’ என்ற(டீ குடித்துக் கொண்ேட ேபசுவோம்) பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார். அதைக் குறிப்பிட்டு அமரிந்தர் சிங் பேசினார்.

நாட்டில் கருப்பு பணம், கள்ளரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் வகையில், கடந்த 8-ந்த தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

அந்த அறிவிப்பு குறித்து பஞ்சாப் மாநிலகாங்கிரஸ் தலைவர்் அமரிந்தர் சிங் சண்டிகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மறுஆய்வு

அப்போது அவர் கூறுகையில், “ பிரதமர் மோடி மக்களுக்கு ‘ஸ்ட்ராங் டீ’ யை வெறும் வயிற்றில் கொடுப்பதால், மக்கள் அல்சர் வந்து செத்து வருகிறார்கள்.

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி மறுஆய்வு செய்யாவிட்டால், அந்த முடிவு மோடிக்கும், அரசுக்கும் திருப்பி அடிக்கும் சக்தியாக(பூமாராங்) மாறிவிடும்.

தஞ்சம்

தனது அரசின் தோல்விகளை மறைப்பதற்கு ரூபாய் நோட்டு செல்லாத என்ற அறிவிப்பு வெளியிட்டு அதற்குள் பிரதமர் மோடி தஞ்சமடைந்துள்ளார். ஏழை மக்களுக்கான அரசு என்று மோடி சொல்வதற்கும் அவரின் செய்கைக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த அறிவிப்பில் ஏழை மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த சில ஆயிரம் ரூபாயை மாற்றிக்கொள்ளவும், வங்கியில் இருந்து பெறவும் ஏ.டி.எம். முன்பும், வங்கியின் முன்பும் கால்கடுக்க நீண்டநேரம் காத்திருக்கிறார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மருத்துவமனை ஏற்றுக் கொள்ளாததால், சிலர் உயிரிழந்து வருகிறார்கள். உணவு வாங்க காசு இல்லாததால் பசியோடு சிலர் தூங்கச் செல்கிறார்கள். இவர்கள் தான் இந்த நடவடிக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஏழைகளுக்கு பாதிப்பு

உங்களின் ‘ஸ்ட்ராங் டீ’ அறிவிப்பு பணக்காரர்களையும், வசதிபடைத்தவர்களையும் ஒன்றும் பாதிக்கவில்லை. ஏழைகளும், ஏழைகளிலும் ஏழையையும்தான் அதிகமாக பாதிக்கிறது.
வசதி படைத்தவர்களுக்கு இந்த திட்டம் குறித்த சமிக்ஞை பல வாரங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு, தங்களின் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத, சமாளிக்கமுடியாத ரூபாய் செல்லாத அறிவிப்பால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக குருத்வாரா போன்ற வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு இலவச உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

திமிர்தனம்

திமிர்த்தனமாக, எதையும் அலட்சியம் செய்து,பிடிவாதமாக இருக்கும் நீங்கள், இந்த திட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலனை கூட செய்ய மறுக்கிறார்கள். நாட்டில் எப்போதும் இல்லாமல் இருக்கும் இந்த சூழலால், பயங்கரமான விளைவுகள் மட்டுமின்றி, சமானிய மக்களுக்கு எதிராக குற்றங்களையும் அதிகரிக்கச் செய்யும். இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கு பிரதமர் மோடி முழுக்க பொறுப்பு ஏற்க வேண்டும் '' எனத் தெரிவித்தார்.