மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி வீடு மற்றும் டெல்லி, கோவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அந்த குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லத்தில் வருமான வரிதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது. 

அதேபோல் பெரிய நிறுவனங்களான அமிரா குரூப், மோஸர் பயர், ராத்தூல் பூரி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடக்கிறது. டெல்லியில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வருமான வரிச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.