காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் டுவீட் செய்த நிலையில், இந்திய ஹூண்டாய் நிர்வாகம் சார்பில் அதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனம் ஹூண்டாய். இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஹூண்டாய் கார்களை விற்பனை செய்துவருகிறது. ஆனால் ஹூண்டாயின் மிகப்பெரிய விற்பனை சந்தை இந்தியாதான். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாய் நிறுவனம், மிகவும் சென்சிட்டிவான காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அலட்சியமாக பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக பெரும் புயலை கிளப்பியது.

காஷ்மீருக்காக தங்களை தியாகம் செய்த காஷ்மீர் சகோதரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்திற்கு துணை நிற்போம் என பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம், #KashmirSolidarityDay #HyundaiPakistan என இரண்டு ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டிருந்தது.

ஹூண்டாய் நிறுவனம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையடுத்து, இந்தியர்கள் ஹூண்டாய்க்கு எதிரான ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். #BoycottHyundai என ஹூண்டாய்க்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதையடுத்து, உடனடியாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியது. இதுதொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்தியா எங்கள் நிறுவனத்தின் 2வது வீடு. இந்தியாவின், இந்தியர்களின் நாட்டுப்பற்றை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். இந்தியாவிற்கு எதிரான கருத்தை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்று ஹூண்டாய் இந்தியா விளக்கமளித்துள்ளது.

Scroll to load tweet…