உத்தரபிரதேச மாநிலத்தில் வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததற்காக பெண் ஒருவரை அவரது கணவரே  பொது மக்கள் முன்னிலையில் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்சகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமித் சிங் என்பவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அந்த கிராமத்தைப் பொறுத்தவரை அங்கு யார் தவறு செய்தாலும்  போலீசிடம் புகார் அளிக்காமல் பஞ்சாயத்து மூலம் தீர்வு கண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்துள்ளதாக அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து  தலைவர் அமித் சிங் நூதன தண்டனை வழங்கினார்.

அதன்படி பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரது கணவர் கொடூரமாக தாக்கி்னார். இந்த தாக்குதலை தடுக்காமல் சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரின் மகன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.