ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய 'மன் கீ பாத்'
மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவரான காஸ்மே 12 இந்திய மொழிகளில் பாடுகிறார்.

பிரதமர் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கீ பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசுகிறார். 2014ஆம் ஆண்டில் இருந்தே ஒலிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல விஷயங்களைப் பற்றியும் நாட்டு மக்களிடம் பேசிவருகிறார். அந்த வகையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றியும் பேசினார். அது அவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
காஸ்மே என்ற ஜெர்மனி நாட்டு இளம் பெண் 12 இந்திய மொழிகளில் இனிமையாகப் பாடும் திறமையைப் பெற்றவர். பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவரான காஸ்மே இசை மீதும் இந்தியா மீது உள்ள ஈடுபாடு காரணமாக பல இந்திய மொழிகளில் பாடுவதற்குப் பழகிக்கொண்டார்.
இவரைப்பற்றி இந்தியப் பிரதமர் தனது மன் கீ பாத் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஒலிபரப்பான 105வது எபிசோடில் காஸ்மே பற்றிய பேச்சு இடம்பெற்றது.
பிரதமர் தனது உரையில், இந்திய கலாச்சாரமும் இசையும் உலகளாவியதாகிவிட்டதாகவும், அதிகமான மக்கள் அவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். பின், தனது மெல்லிசைப் பாடல்களால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த இளம் பாடகர் காஸ்மே பற்றிக் குறிப்பிட்டார்.
"21 வயதான காஸ்மே இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக உள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் காஸ்மே , இந்தியாவுக்கு ஒருபோதும் வந்ததில்லை, ஆனால் அவர் இந்திய இசையின் ரசிகை. அவர் இந்தியாவை ஒருபோதும் பார்த்ததில்லை. இருந்தாலும் இந்திய இசையின் மீதான அவரது ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், அசாமி, பெங்காலி, மராத்தி, உருது உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பாராட்டு தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக காஸ்மே கூறியிருக்கிறார். "மன் கீ பாத் நிகழ்ச்சியில் தன்னைப் பற்றிப் பேசியிருப்பதை அறிந்து எனக்கு என்ன் சொல்வதென்றே தெரியவில்லை. அது என் வாழ்க்கையை மிகவும் மாற்றிவிட்டது. அப்போதெல்லாம் ஒரே நாளில் 10-20 பேட்டிகள் கொடுத்தேன்" என்று காஸ்மே தெரிவித்துள்ளார்.
"சென்ற வருடம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு நேரில் சந்தித்தோம். அவர் மிகவும் கனிவாகப் பேசினார். ஜோக்குகள் சொன்னார். உலகத்தில் பெரிய அரசியல்வாதியாக பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அவர் எங்களிடம் மிக சகஜமாகப் பழகினார். அவருக்கு என் பாடல்கள் பிடிக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அது இன்னும் எனக்கு நம்ப முடியாததாகவே இருக்கிறது" என்றும் காஸ்மே கூறினார்.
"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இசையும் ஆன்மிகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் நான் இந்தியா நேசிக்கிறேன்" என்கிறார் காஸ்மே .