Indian Economy: போர் நடந்துகொண்டிருந்த போதே ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இந்தியா ஒரே நேரத்தில் நல்லுறவைப் பேணியது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், எண்ணெய் துறை அமைச்சகமும் வளைகுடா நாடுகளுடன் பேசி தடையற்ற விநியோகத்தை உறுதி செய்தனர்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர் மற்றும் 'ஹார்முஸ் நீரிணை' பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இந்த போரால் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நமது அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. அங்கு லாக்டவுன் போடும் சூழ்நிலை நிலவியது.

ஆனால் உலகின் மிகப்பெரிய நாடான நமது இந்தியாவில் போர் நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தட்டுப்பாடின்றி தொடர்ந்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நெருக்கடி நிலையை இந்தியா எப்படி சமாளித்தது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
விநியோகஸ்தர்களைப் பன்முகப்படுத்திய உத்தி
ஒரே பிராந்தியத்தை அல்லது ஒரு சில வளைகுடா நாடுகளை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்ற உத்தியை இந்தியா தீவிரமாகப் பின்பற்றியது. 2006-07 காலகட்டத்தில் வெறும் 27 நாடுகளிடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்கிய இந்தியா, தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
ரஷ்யாவிடமிருந்து நல்ல தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி பெருமளவு அதிகரிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய அமெரிக்கா, பிரேசில், அங்கோலா, கயானா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. வெனிசுலா நாட்டிடம் இருந்து மட்டும் நல்ல தள்ளுபடி விலையில் 12 மில்லியனுக்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருந்தது.
ராஜதந்திர பேச்சுவார்த்தை
எண்ணெய் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக திகழும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியை ஈரான் மூடியதே உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மூல காரணமாகும். இந்தியா இந்த ஆபத்தைக் குறைக்க மாற்றுத் திட்டங்களைக் கையாண்டது. ஆபத்தான கடல் பகுதிகளைத் தவிர்க்க ஓமானில் உள்ள சோஹர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா மற்றும் கோர்ஃபக்கான் போன்ற மாற்று துறைமுக வழிகளை இந்தியா பயன்படுத்தி எண்ணெய் கொண்டு வந்தது. சில நேரங்களில் ஈரானுடன் பேசி ஹர்முஸ் நீரிணை வழியாக இந்தியா எரிபொருள் கொண்டு வந்தது.
மேலும் போர் பயத்தால் கப்பல்களுக்கான சர்வதேச காப்பீட்டு கட்டணங்கள் (Insurance premiums) உலகளவில் 300 சதவீதம் வரை உயர்ந்தபோதும், சுமுகமான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியா தன் போக்குவரத்துச் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
அவசர கால எண்ணெய் சேமிப்பு
இந்தியாவிடம் இருந்த மிக பலமான அவசர கால எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு பொதுமக்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. இந்தியாவிடம் சுமார் 74 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இருந்தது: சுமார் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு, 60 நாட்களுக்குத் தேவையான இயற்கை எரிவாயு இருப்பு, 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு இருப்பு இருந்ததும் மக்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.
இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன்
கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதில் இந்தியா உலக அளவில் 4-வது இடத்திலும், சுத்திகரித்த பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் 5-வது இடத்திலும் உள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் முழுத் திறனையும் தாண்டி இயங்கி, தங்கு தடையின்றி எரிபொருளை உற்பத்தி செய்தன. உள்நாட்டுச் சமையல் எரிவாயு (LPG) உற்பத்தி 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.
உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாத்த யுக்தி
இந்த எரிபொருள் நெருக்கடி நாட்டின் பிற முக்கியப் பொருளாதாரத் துறைகளைப் பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சலுகைகளையும் பாதுகாப்புகளையும் வழங்கியது. பயிர் நடவு செய்யும் காரிஃப் பருவத்திற்காக 177 லட்சம் டன் உர இருப்பு உறுதி செய்யப்பட்டது. தட்டுப்பாடு வராமல் தடுக்க முந்தைய அளவை விட 36% கூடுதல் உரம் இருப்பு வைக்கப்பட்டது. எரிபொருள் விலை உயர்வால் சிறு தொழில்களில் ஆட்குறைப்பு அல்லது பணப் பற்றாக்குறை வராமல் தடுக்க ₹2.5 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு நீட்டித்தது. விமான எரிபொருள் விலை உயர்ந்தாலும், விமான நிலைய தரையிறக்கம் மற்றும் பார்க்கிங் கட்டணங்களை 25 சதவீதம் குறைத்து உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயராமல் தடுக்கப்பட்டது. மேலும் போர் நடந்து கொண்டிருந்தபோது பெட்ரோல், டீசல் விலையயும் உயர்த்தாது பொருளாதாரத்துக்கு பெரும் நிம்மதியை அளித்தது.
இந்தியர்கள் மீட்பு
போர் நடந்துகொண்டிருந்த போதே ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இந்தியா ஒரே நேரத்தில் நல்லுறவைப் பேணியது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், எண்ணெய் துறை அமைச்சகமும் வளைகுடா நாடுகளுடன் பேசி தடையற்ற விநியோகத்தை உறுதி செய்தனர். மேலும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 4.75 லட்சம் இந்தியர்களை அரசு பத்திரமாக மீட்டது. இது வளைகுடா நாடுகளில் வாழும் 1 கோடி இந்தியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு, அவர்கள் மூலம் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் 100 பில்லியன் டாலர் வெளிநாட்டுப் பண வரத்தையும் பாதுகாத்தது.


