இவரைப் போன்ற ஆட்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அவர்களது பொழப்பை நடத்துகிறார் என வழக்கறிஞர் ஜெய்சிங்கை  நிர்பயா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பாக அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தனது மகளின் இறப்பை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங்;- நிர்பயாவின் தாயின் வேதனையை முழுவதும் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் அவர் சோனியா காந்தியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். ராஜூவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனை வேண்டாம் என்று மன்னித்தார். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால், நாங்கள் மரண தண்டனையை எதிர்க்கிறோம் என தெரிவித்தார். அதேபோல், நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வழக்கறிஞர் இந்திராவின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திரா ஜெய்சிங் யார். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மொத்த நாடும் விரும்புகிறது. இவரைப் போன்றவர்கள் இருப்பதினால் தான் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய உண்மையான நீதி மறுக்கப்படுகிறது. இவரைப் போன்ற ஆட்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவரால்தான் நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையாமல் உள்ளது என்று கடுமையாகப் சாடினார். 

இந்நிலையில், குற்றவாளிகளை மன்னிக்க கோரிய வழக்கறிஞர் ஜெய்சிங், தனது கருத்துக்கு நிர்பயா தாயாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நிர்பயா தந்தை ஆவேசமாக பதிலளித்துள்ளார். சோனியா காந்தியை போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை. வழக்கறிஞர் ஜெய்சிங் தனது கருத்துக்கு வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.