Asianet News TamilAsianet News Tamil

கழுதை, குதிரைகளுக்கு 3 நாள் சிறைத் தண்டனை... அவை என்ன தப்பு செய்தன தெரியுமா? 

Horses donkeys sent behind bars for damaging saplings in UP
Horses donkeys sent behind bars for damaging saplings in UP
Author
First Published Nov 28, 2017, 9:31 AM IST


விநோதச் செய்திகளுக்கு உத்தரப் பிரதேசத்தில் பஞ்சமே இல்லை. திங்கள் கிழமை நேற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒரு விநோத செய்தியைக் கேட்டு மக்கள்  சிரிக்கவே செய்தார்கள். பலர் பரிதாபப் பட்டார்கள். குதிரை,கழுதைகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விநோதச் செய்தியைக் கேட்டு யார்தான் சிரிக்காமல் இருப்பார்கள்? அதுவும்  மரக்கன்றுகளை சேதப்படுத்தியதான குற்றச்சாட்டில்..?! 

ஆம். மரக் கன்றுகளைச் சேதப்படுத்தியதற்காக 2 குதிரைகளும் 2 கழுதைகளும் 3 நாள் சிறைத் தண்டனை அனுபவித்த விநோதச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவும் அந்த மரக்கன்றுகளை சேதப் படுத்திய இடம் மேலும் விநோதமானது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜாலோன் நகரில் உள்ள மாவட்டச்  சிறை வளாகத்தில், சிறை வளாகத்தில் அழகு படுத்துவதற்காக விலை உயர்ந்த பல வகையான மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்த வளகத்துக்குள் கடந்த  3 தினங்களுக்கு முன்னர் நுழைந்த 2 குதிரைகளும் 2 கழுதைகளும் அந்த மரக் கன்றுகளைக் கடித்து சேதப்படுத்தின. இதையடுத்து அந்த  விலங்குகளைச் சுற்றி வளைத்துப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை ஒரு பெரிய விஷயம் போல்  மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சீதாராம் சர்மா கூறியுள்ளார்.  

இதனிடையே, அந்த விலங்குகளின் உரிமையாளர் கமலேஷ் அவற்றைத் தேடிக் கொண்டு வந்தார். எங்கெல்லாமோ தேடினார். யாரோ சொன்னதன் பேரில், அவை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது. போலீஸாரிடம் போய் கெஞ்சினார். அவர்கள் எவரும் உதவுவதாக இல்லை. மனு அளித்துப் பார்த்தார். போலீஸார் மசியவில்லை. பின் வழக்கம்போல், உ.பி.யில் பரவலாக பொதுமக்கள் மனு அளிக்கும் அரசியல்வாதிகளிடமே சென்றார். 

கமலேஷ், வேறு வழியின்றி உள்ளூர் பாஜக., பிரமுகர்களின் உதவியை நாடினார். உள்ளூர் பாஜக., தலைவர் ஷக்தி கோஹாயிடம் சென்று தன் விலங்குகளை மீட்டுத் தருமாறு கோரினார். அவரின் நிலையைக் கண்டு  வருந்திய ஷக்தி கோஹாய், சிறை வளாகத்துக்குச் சென்றார். சிறை அதிகாரிகளிடம் பேசினார். அதன் பின்னர், 3 நாள் சிறைத் தண்டனை பெற்ற நிலையில், அந்த 4 விலங்குகளும் திங்கள்கிழமை நேற்று மாலை விடுதலை ஆகி வெளியில் வந்தன. 

ஆளும் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல் ‘தல’ தலையிட்டதில், ரிலீஸ் ஆர்டர் கையெழுத்தாகி, அந்த நான்குவிலங்குகளும் அதன்  உரிமையாளர் கமலேஷுடன் வீடு திரும்பின.

Follow Us:
Download App:
  • android
  • ios