சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப்பிரதேச முதல்வர் விர்பத்ர சிங்கின் ரூ.27 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டை அமலாக்கப்பிரிவு துறையில் நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்தனர். 

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு முதல்வராக விர்பத்ர சிங் இருந்து வருகிறார். 

கணக்கில் வராத வருவாய் இனங்கள் மூலம் ரூ.10 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக முதல்வர் விர்பத்ரசிங் அவரின் மனைவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து குற்றபத்திரிகையை தாக்கல் செய்தது. 

கடந்த 2015ம் ஆண்டு சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு துறையினர், காங்கிரஸ் மூத்த தலைவர் விரபத்ரசிங் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். 

இதன் அடிப்படையில், டெல்லியில் தெற்குப்பகுதியில் உள்ள மெஹாராலி பகுதியில் இருக்கும் விர்பத்ர சிங்கின் பண்ணை வீட்டை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீட்டின் அரசு மதிப்பீடு ரூ. 6.661 கோடி இருக்கும். ஆனால், சந்தை மதிப்பு ரூ.27 கோடியாகும். ‘மேப்பில் டெஸ்டிநேஷன் அன்ட் ட்ரீம்புல்ட்’ என்ற பெயரில் அந்த வீடு இருந்தது.

முதல்வர் விர்பத்ரசிங்குக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த நிலையிலும், அவரை பதவியில் இருந்து விலக வேண்டாம் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “ முதல்வர் விர்பத்திரசிங் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு குறித்து கவலைப்படத் தேவையில்லை. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் வரை விர்பத்ரசிங் தொடர்ந்து போரிடுவார்’’ என்றார். 

அதேசமயம், ஊழல்கறை படிந்த ஒருவர் மாநில முதல்வராக இருக்க கூடாது, உடனடியாக விர்பத்ரசிங் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கோரி வருகிறது.