ஹிமாச்சலப்பிரதேசம் காங்கிரஸ் ஆட்சியில் உச்சக்கட்ட குழப்பம்; 15 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!!
ஹிமாச்சலப்பிரதேசம் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்று இருந்து முக்கிய அமைச்சரான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
ஹிமாச்சலப்பிரதேசம் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் விர்பத்ரா சிங்கின் மகனாவார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஏற்பட்ட சல சலப்பை அடுத்து பாஜகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களை ஆளுநர் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்களில் எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூரும் ஒருவர்.
இதையடுத்து ஜெயராம் தாகூர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் ராஜ் பவனில் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்துப் பேசினர். காங்கிரஸ் முதல்வரான சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாகக் கூறி, அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயராம் தாகூர், ''பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆட்சியில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி தார்மீக உரிமையை இழந்துள்ளது'' என்றார்.
இதற்கு முன்னதாக பேட்டியளித்த விக்ரமாதித்ய சிங், ''கடந்தாண்டு தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்த நிலையில், ஆட்சியில் தொடருவதற்கான தார்மீக உரிமையை காங்கிரஸ் இழந்துள்ளது. மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். எனது தந்தை தொடர்ந்து மாநிலத்தை ஆறு முறை ஆட்சி செய்து இருக்கிறார். இதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், மால் ரோட்டில் அவருக்கான சிலை அமைப்பதற்கு சிறிய இடத்தைக் கூட ஒதுக்கவில்லை. இதுதான் இந்த ஆட்சி எனது தந்தைக்கு காட்டும் மரியாதை'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
ஹிமாசலப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அபிஷேக் மானு சிங்வி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நிறுத்தப்பட்டு இருந்தார். ஆனால், காங்கிரஸ் எம்எம்ஏக்கள் மாற்றி வாக்களித்த காரணத்தால் இவர் தோற்கடிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் தேர்வு பெற்றார். இருவரும் 34 வாக்குகள் சமமாக பெற்று இருந்தனர். இதில் இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் வாக்களித்து இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே மூன்று சுயாட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது இவர்களும் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது தற்போது முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் வேட்டு வைத்துள்ளது. இதையடுத்து, கர்நாடகா துணை முதல்வர் டி. கே. சிவகுமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் புபிந்தர் சிங் ஹூடா இருவரும் சிம்லா விரைந்து காங்கிரஸ் கட்சி நிலவரங்களை கையாண்டு வருகின்றனர்.