கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்து மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹிஜாப் விவகாரம் ஆந்திர மாநிலத்திலும் வெடித்துள்ளது.
கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்து மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹிஜாப் விவகாரம் ஆந்திர மாநிலத்திலும் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடைவிதித்து இடைக்கால தீர்ப்பளித்தது. 5 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று முன்தினம் முதல் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அப்போதும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு சிலர் ஹிஜாப்பை கழற்ற முடியாது என்று கூறிவிட்டு திரும்பி சென்று விட்டனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று சில இடங்களில் சில மாணவிகள் மட்டுமே ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்குச் சென்றார்கள். ஆசிரியர்கள் சொன்னதை கேட்காமல், படிப்பு தேர்வை விடவும் ஹிஜாப்தான் முக்கியம் என்று பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திலும் ஹிஜாப் சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் இருக்கும் லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல முடியும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியாக கூறி விட்டது . இதனால் மாணவிகள் கல்லூரி எதிரில் போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த இஸ்லாமியர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திரா முழுவதும் மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
