கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், தமிழ்நாட்டில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் சேருவதை கர்நாடகாவில் பல்கலைக்கழக முன் கல்லூரி வகுப்புகள் என அழைக்கிறார்கள். அங்குள்ள கல்வி நிறுவனங்களும் அந்த மாணவ, மாணவிகளை முன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் என்றே அழைக்கின்றன. இருப்பினும் முந்தைய வகுப்புகளை போலவே இந்த மாணவர்கள் தங்களுடைய வகுப்புகளுக்கு கல்வி நிறுவனம் அனுமதித்த சீருடை அணிந்தே வர வேண்டும். பட்டப்படிப்பு கல்லூரிகள் போல வண்ண ஆடை அணிந்து வர அனுமதி கிடையாது. இந்த நிலையில், கடந்த சில வாரங்கலாக ஹிஜாப் அணியும் முஸ்ஸிம் மாணவிகள் சிலர் வகுப்புக்குள் முகத்தை மறைக்கும் ஆடையை அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்போது அந்த மாநிலத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் இந்து மதம் சார்ந்த அமைப்பினரின் அழுத்தம் காரணமாக அங்குள்ள சில பள்ளிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என பள்ளி வளாகத்துக்கு வெளியே 3 நாட்களுக்கு மேலாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவிகளின் குரலுக்கு கர்நாடக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும்வரை, தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. பள்ளிகளில் ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டது அனைத்துத் தரப்பு மாணவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறான சூழலில் கர்நாடக அரசும், கல்வி நிறுவனங்களும் இந்த விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாள்வது அவசியம்' என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதனிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கும் இந்து மாணவர்கள் காவி நிற துண்டு அணிவதற்கும் இடையிலான மோதல் விவகாரம் கர்நாடகான் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், வகுப்புவாத பிரச்னை ஏற்படாமல் தடுக்க அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அறிவிப்பை கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
