விபத்தில் மகன் பலியானதற்கு உரிய இழப்பீடு பெற 25 ஆண்டுகள் காத்திருந்த தாயிடம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரினார். அவருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதையும் நீதிபதி உறுதி செய்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரின் மகன் லோகேஸ்வரன். லாரி டிரைவரான இவர் கடந்த 1993ம் ஆண்டு மே 18ந்தேதி அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, தாயார் பாக்கியம், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இழப்பீடு கோருவதற்கு பதிலாக, வேலையாள இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரினார். பெரும்பாலும் தொழிற்சாலையில் நடக்கும் விபத்துக்களுக்கு மட்டும வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதால், இந்த முறையீட்டை நிராகரித்தது.

ஏனென்றால், உடற்கூறு அறிக்கையில், இறந்த நபரின் பெயரைக் குறிப்பிடாததால் அது சந்தேகத்தன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, பாக்கியம், மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் தன் மகன் இறப்புக்கு இழப்பீடு கோரி, மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனுச் செய்தார். ஆனால், லாரியின் காப்பீட்டு நிறுவனமான தி நேஷனல் இன்சூரன்ஸ்நிறுவனம், பாக்கியம் முதலில் வேலையாள் இழப்பீடு சட்டத்தில் அனுகி அது நிராகரிக்கப்பட்டவுடன், மோட்டார் வாகன இழப்பீடு சட்டத்தில் அனுகியுள்ளார். இதை நிராகரிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், காப்பீடு நிறுவனத்தின் வாதத்தை தள்ளுபடி செய்த மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயம், பாக்கியத்துக்கு 7.5 சதவீத வட்டியுடன், ரூ.3.47 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டு தொகையை லாரியின் காப்பீடு நிறுவனமும், அரசு பஸ்சும் சரிபாதி பிரித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, காப்பீடு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடந்த வந்த நிலையில், நேற்று முன்தினம்  நீதிபதி என்.ஷேசாயி தீர்ப்பளித்தார். அதில்  கூறியிருப்பதாவது-

இந்த விபத்து கடந்த 1993ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. 24 ஆண்டுகள் ஆகியும், தனது மகனை பலிகொடுத்த அந்த தாய்க்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இன்னும் அவர் இழப்பீட்டுக்காக காத்திருக்கிறார். அவருக்கு என்ன இழப்பீடு அதை வழங்க வேண்டும். தீர்ப்பாயம் அவருக்கு நீதி வழங்க தாமதித்து இருக்கலாம். முதலில் இந்த மனுவை நிராகரித்த வேலையாள் இழப்பீடு தீர்ப்பாயம், ஒரு மனித உயிர் பலியானதை கருத்தில் கொள்ளவில்லை. மருத்துவரின் கவனக்குறைவால் பலியானவர் பெயர் குறிப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள தவறிவிட்டது.

ஆதலால், அடுத்த 4 வாரங்களுக்குள் ரூ.3.47 லட்சத்தை 7.5 சதவீத வட்டியும் பாக்கியத்துக்கு அளிக்க உத்தரவிடுகிறேன். உங்களின் உரிமையை நீங்கள் பெறவும், பாதுகாக்கவும் 24 ஆண்டுகள் காக்க வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.