மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களை வளைத்துப் பிடித்த பாஜக எம்.பி. ஆர்.கே. சிங் படேல்!
உத்தர பிரதேச மாநில பாஜக எம்.பி.யான ஆர்.கே.சிங் படேல் மக்களவைக்குள் அத்துமீறி குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தார்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புகளை மீறி நுழைத்து தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்தவர், உத்தர பிரதேச மாநிலம் பண்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான ஆர்.கே.சிங் படேல்
இதுபற்றி படேல் கூறுகையில், “நாங்கள் வெளியே செல்லும்போது ஒரு பாதுகாப்புப் பணியாளர் குற்றவாளிகளில் ஒருவருடன் சண்டையிடுவதைக் கண்டேன். நான் அவரை நோக்கி பாய்ந்து கழுத்தைப் பிடித்து இறுக்கினேன். அதன் பிறகு பல எம்.பி.க்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். குற்றவாளி தான் வைத்திருந்த புகைக் குண்டை பயன்படுத்தி எங்களிடம் இருந்து தப்ப முயன்றார்" என்கிறார்.
பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த இருவர், அவைக்குள் மஞ்சள் நிற புகைக்குண்டுகளை வீசினர். இதனால், மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. போலீசார் மக்களவைக்குள் நுழைந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மிகப்பெரிய பாதுகாப்புக் அச்சுறுத்தல் என்றும் இது குறித்து முறையான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாகவும் இருவமு் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இரண்டு பேர் அரசுகுக எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2019 இல், படேல் 17வது மக்களவையில் பண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2009 ஆம் ஆண்டு பண்டா தொகுதியில் இருந்து 15வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2017 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக மாணிக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அவர் முறையே 1996 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் கார்வி தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.