கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சீனாவில் உருவான கொரோனா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

கொரோனா தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால், அதன் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறது. 

இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிக மிக குறைவு. அதற்கு மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் முக்கியமான காரணம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 315ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து தப்பித்து, அதை மேலும் பரவாமல் தடுத்து விரட்ட, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிக அவசியம். அதனால் தான் இந்தியாவில் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். 

பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சுய ஊரடங்கின் அவசியம் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனா இன்னும் பொதுச்சமூகத்தில் பரவவில்லை. பொதுச்சமூகத்தில் பரவினால் விளைவு கடுமையாக இருக்கும். எனவே அதற்கு முன்னதாக அதை தடுப்பதற்கு ஊரடங்குதான் சரியான வழி. 

பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கே கூட, முழுமையாக ஒரு நாள் அல்ல. 14 மணி நேரம் தான். மக்கள் நடமாட்டம் ஒருநாளைக்கு கட்டுப்படுத்தப்பட்டால் கூட, தற்போதைய சூழல்லில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சுய ஊரடங்கின் காரணமாக கொரோனாவின் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று கூற முடியாது. ஆனால் சுய ஊரடங்கின் மூலம் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால், பெரும்பாலான பரப்புகளில் சில மணிநேரங்களுக்கு மட்டுமே வீரியத்துடன் இருக்கும் கொரோனா வைரஸின் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்.

எனவே சுய ஊரடங்கின் விளைவாக, கொரோனாவை முற்றிலும் தடுத்துவிடமுடியுமா என்று கேள்வியை எழுப்பாமல் அதை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஸ்பெய்னை விட, பன்மடங்கு அதிக மக்கள் தொகையை பெற்றிருந்தும் கூட, இந்தியாவில் அந்த நாடுகளின் அளவுக்கு கொரோனாவின் தாக்கம் கொடுமையானதாக இல்லை என்பதை உணர்ந்துகொண்டு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். 

கொரோனாவின் தாக்கத்தில், இப்போது இந்தியா இருக்கும் இரண்டாவது கட்டத்தில் இத்தாலி இருந்தபோதே, அந்நாட்டு அரசு, தனிமைப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தியது. ஆனால் அந்நாட்டு மக்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாகத்தான் இப்போது கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே நாம், அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து சுய கட்டுப்பாட்டுடன் தனிமைப்படுதல் வேண்டும்.

இந்தியாவில் இதையும் மீறி ஒருவேளை கொரோனா வேகமாக பரவுமேயானால், அடுத்ததாக சீனா, இத்தாலி ஆகிய நாடுகளை போல நாடு தழுவிய முடக்கத்தை அரசு அமல்படுத்தக்கூடும். எனவே அதுமாதிரியான சூழ்நிலைகளுக்கு மக்கள் தயாராக இருக்கிறார்களா, எந்தளவிற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளத்தான் இந்த சுய ஊரடங்கு.