நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 12 முதல் 15 நிமிடங்கள் வரை பயணம் செய்யும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.

பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து எலெக்ட்ரானிக்சிட்டி வரை இந்த ஹெலிகாப்டர் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்த சேவையை அறிமுகம் செய்து வைத்தாலும், முறைப்படி போக்குவரத்து தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகும்.

தம்பி விமானப்போக்குவரத்து நிறுவனம் மூலம் இந்த ஹலிகாப்டர் சேவை இயக்கப்பட உள்ளது. பெல்412 ரக ஹெலிகாப்டர்கள், இரு பைலட்கள் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் 13 பயணிகள் வரை பயணிக்கலாம். மற்றொரு பெல் 407 ஹெலிகாப்டரில், 5 பயணிகள் வரை பயணிக்கலாம். 

இது குறித்து  மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசுகையில், “ இந்தஹெலிகாப்டர் சேவை என்பது, ஒரு ஆடம்பரமான டாக்சி போன்றது. இன்னும் கட்டணம் முடிவாகவில்லை. குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கட்டணம் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்துக்கு 60 ஆயிரம் பயணிள் வந்து செல்கிறார்ள். இதில், 100 பயணிகள் ஹெலிடாக்சியை பயன்படுத்தினால், இயக்கும் செலவு குறையும். இது குறித்து  நன்கு கள ஆய்வு செய்து தொடங்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 பயணிகள் வரை பயணிப்பார்கள் எனத் தெரிகிறது.

கெம்பகவுடா விமானநிலையத்தில் இருந்து, எலெக்ட்ரானிக் சிட்டி வரை இயக்கப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில்  எலெக்ட்ரானிக் சிட்டியை சென்றடையும். இதே சாலை மார்க்கமாக சென்றால், குறைந்தபட்சம் போக்குவரத்து நெரிசலைக் கடக்க 3 மணிநேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.