அரியானாவில் பட்டப்பகலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலில் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் உடலில் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக விகாஸ் சவுத்ரி இருந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினர்.  சுமார் 10 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், குண்டுகள் துளைத்த நிலையில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டது.

பின்னர், பொதுமக்கள் மீட்டு உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவரது இறப்பு அரியானா காங்கிரஸுக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது இறப்பிற்கு காங்கிரஸ் சார்பில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.