ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா; அமைச்சரவையும் கலைப்பு - என்ன காரணம்?
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளும் பாஜக - ஜனநாயக்க ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரது அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.
மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், அமைச்சரவையை கலைக்கும் கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, பாஜக மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி ஆகிய கட்சிகள் இடையேயான உறவு மோசமானதையடுத்து, அக்கூட்டணி முறிந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பாஜக கூட்டணியில் ஜேஜேபி இணைந்தது.
பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு!
இந்த நிலையில், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஹிசார், பிவானி ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜகவிடம் ஜேஜேபி கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால், மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட பாஜக விரும்பியது. கடந்த மக்களவை தேர்தலில் 10 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த பின்னணியில், ஹரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜேஜேபிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஏழு பேர் சுயேச்சைகள். இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியானா லோகித் கட்சி (எச்எல்பி) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர்.
இதில், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியானா லோகித் கட்சி (எச்எல்பி) ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.எல்.ஏ., 6 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜேஜேபி கட்சியை சேர்ந்த 4-5 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது அப்படியே தொடர்ந்தால் அம்மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.