ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ, வீடு புகுந்து அதிரடியாக கைது செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்திவரும் நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டியது. இதையடுத்து ப.சிதம்பரம், முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், சிதம்பரத்தின் டெல்லி இல்லத்தில் அவரை அதிரடியாக கைது செய்தது சிபிஐ. 

சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரங்கேற்றப்பட்ட சம்பவம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிதம்பரத்தை கிரிமினலை போல சிபிஐ கைது செய்துள்ளதாகவும், இதுவொரு ஜனநாயக படுகொலை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த வழக்கில் இதுவரை 25 முறை சிதம்பரம் ஜாமீன் பெற்றிருக்கிறார். 25 முறை ஜாமீன் பெற்றவரால் இந்தமுறை பெறப்படவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது சிதம்பரத்திற்கு தொடர்பிருப்பது உறுதியாகியிருக்கிறது என்பதாலும் அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததோடு, மழுப்பலாக பதிலளித்ததாலும் அவரை கைது செய்வதற்கான காரணம் இருக்கிறது என்பதால் தான் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. எனவே இந்த கைதிற்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.