தமிழ், மராத்தி, வங்காளி, குஜராத்தி போன்ற இந்தி அல்லாத மொழிகளை மாநில மொழிகள் என அழைப்பது தவறு என்றும், அந்த மொழிகளும் தேசிய மொழிகளே எனவும் பத்மபூஷன் விருது பெற்ற பிரபல இந்திக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான குல்சார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற 2017 கவிதை மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் மேலும் கூறியிருப்பதாவது-

நம் நாட்டில் மிகப் பழமையான, முக்கியமான மொழிகள் உள்ளன. தமிழ் ஒரு செம்மொழி. அது ஒரு பிரதான மொழியும் ஆகும். அதே போல மராத்தி, வங்காளி, குஜராத்தி போன்ற பல மொழிகளும் முக்கிய மொழிகளாக விளங்குகின்றன.

கல்லூரிகளில் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் மற்றும் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் (இழந்த சொர்க்கம்) போன்ற ஆங்கில இலக்கிய நூல்களை எல்லாம் சொல்லித் தரும்போது, காளிதாசரின் படைப்புகளையும், தருமர், திரவுபதி பற்றியும் ஏன் கல்லூரிகளில் கற்பிக்கக் கூடாது? இவை நம் கலாச்சாரத்துக்கு நெருக்கமானவை. நாட்டில் உள்ள எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

நான் ஷேக்ஸ்பியருக்கு எதிரானவன் அல்ல. அவரது நூல்களை நானும் படித்துள்ளேன். சாதத் ஹசன் மாண்டோ போன்ற நவீன எழுத்தாளர்களின் படைப்புக்களையும் கல்லூரிகளில் கற்றுத் தரவேண்டும்,

மனிதகுல அடையாளம்

இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால் கலாச்சார சுதந்திரத்தை இன்னும் பெறவில்லை. காலனிய சிந்தனையோட்டத்தில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை.

நிலவில் காலடி எடுத்துவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் மறைந்த போது இந்தியாவில் அவரைப் பற்றி யாரும் எழுதாததற்கு நாம் வருத்தப்படவேண்டும். அவர் மனிதகுலத்தின் அடையாளம். அவரைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.

நாம் துண்டு, துண்டாக பிரிந்து வாழ்வது வேதனையானது. நாம் ஒன்றுபட்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் கல்புர்கி பற்றியும் நான் எழுதியுள்ளேன். நாம் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், வெவ்வேறு மொழிகளில் பேசினாலும், எழுதினாலும் இதுபோன்ற நேரங்களில் ஒன்றுபடவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.