குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.  

பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பட்டேல் உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் குற்றம் செய்தவர் என்பது மட்டும் ஹர்திக் பட்டேலுக்கு தடையாக இருந்தது.

இதனையடுத்து சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பில் ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நீதிபதி நிராகரித்தார். மேலும் ஹர்திக் பட்டேல் குற்ற தண்டனை பெற்றவர் என்பதால் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.