நாட்டில் ரூபாய் நோட்டு தடை அமல்படுத்தப்பட்டபின், அதிகமான கள்ளநோட்டுகள் பிடிபட்ட மாநிலங்களில் குஜராத் முதலிடம் வகிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமாகும். அங்கு தற்போது பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் விஜய் ரூபானி முதல்வராக இருந்து வருகிறார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  மத்திய உள்துறை இணை அமைச்சர்ஹன்ஸ்ராஜ் ஜி அஹிர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது-

கடந்த ஆண்டு நவம்பர் 9 ந்தேதி முதல் 2017ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி வரை எடுக்கப்பட்ட தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் படி, புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள்  23 ஆயிரத்து 429 எண்ணிக்கையாலான கள்ள நோட்டுகள்  பிடிபட்டுள்ளன. இவை சர்வதேச எல்லைப்பகுதிகள், மாநிலங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் ரூ.1.57 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மிசோரத்தில்ரூ.55 லட்சம், மேற்கு வங்காளத்தில் ரூ.44 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.5.60 லட்சம் கைப்பற்றப்பட்டது ஒட்டுமொத்தமாக ரூ.2.55 கோடிமதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.  சர்வதேச எல்லைப்பகுதிகள் வழியாக கள்ளநோட்டுகள் கடத்துதலைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.