குஜராத்தில் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 4 குரங்குகளை வனத்துறையினர் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவில் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது அசாம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான வதோதராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வினியாட் கிராமத்தில் மரம் ஒன்றில் நான்கு குரங்குகள் தஞ்சமடைந்தன. பின்னர் பெய்த கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து, அம்மரத்தை விட்டு வெளியேற முடியாமல் குரங்குகள் சிக்கித் தவித்து வந்தன. 

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிக்கிக்கொண்ட குரங்குகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். வெள்ளத்தில் சிக்கிய குரங்குகளை மீட்க மரங்களுக்கு இடையே வனத்துறையினர் கட்டப்பட்ட கயிற்றை பிடித்து குரங்குகள் வெளியே வந்தன. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.