சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் டீஸ்டா செதல்வாட் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

2002 குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் காவல் துறை தலைவர் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோரை குஜராத் காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

மும்பையை அடுத்த ஜூகு எனும் பகுதியில் வசித்து வந்த டீஸ்டா செதல்வாட்-ஐ முதலில் சான்டாகுரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் கைது செய்யப்படுவதாக உள்ளூர் காவல் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டது. தான் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் டீஸ்டா செதல்வாட் குற்றச்சாட்டு தெரிவித்தார். அகமதாபாத் அழைத்துச் சென்ற பின் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவிக்கின்றனர். 

காவல் துறை மறுப்பு:

“அவரை குஜராத் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் அழைத்துச் சென்று இருக்கின்றனர்... எங்களுக்கு இந்த வழக்கு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கி அதன் பின் அங்கு இருந்து அழைத்து சென்றனர்,” என டீஸ்டா செதல்வாட் வழக்கறிஞர் விஜய் ஹையர்மத் தெரிவித்தார். எனினும், டீஸ்டா தாக்கப்படவில்லை என உள்ளூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அகமதாபாத் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் டி.பி. பராட் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதது. காவல் ஆய்வாளர் அளித்த புகாரில், “டீஸ்டா செதல்வாட், சஞ்சீவ் பட் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் போலி ஆதாரங்களை உருவாக்கி வேண்டும் என்றே அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தண்டனைக்கு உரிய குற்ற செயல் ஆகும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அவதூறு வழக்கு:

2002 குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்கு தொடர்ந்ததாக சமூக ஆர்வர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கான முன்னால் டிஜிபி ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அகமதாபாத் போலீசார் தெரிவித்து உள்ளனர். 

இதே வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கியதை அடுத்து சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.