குஜராத்தின் கேடா பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக பிரதமர் மோடி தாக்கிப் பேசினார். தீவிரவாதம் கூட காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருக்கிறது என்றார்.
கேடாவில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் மோடி பேசுகையில், "குஜராத் நீண்டகாலமாக தீவிரவாதத்தின் இலக்காக இருந்தது. குஜராத் மக்கள் சூரத் மற்றும் அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் இருந்தது. பயங்கரவாதிகளை குறிவைத்து அழிக்குமாறு அப்போது நாங்கள் காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டோம். மாறாக அவர்கள் என்னை குறிவைத்தனர். நாட்டில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தது.
பாட்லா ஹவுஸ் என்கவுன்டரின் போது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பினர். தற்போது காங்கிரஸ் மட்டுமல்ல, குறுக்குவழி மற்றும் சமாதான அரசியலில் நம்பிக்கை கொண்ட பல கட்சிகள் எழுந்துள்ளன.
கடந்த 2014ல் உங்களுடைய ஒரு வாக்கு நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்க பெரிய அளவில் கைகொடுத்தது. தீவிரவாதிகள் நமது எல்லைகளைத் தாக்குவதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டும். ஆனால் எங்களது அரசு நடத்திய உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. 25 வயதுக்குட்பட்ட மாநில இளைஞர்கள், ஊரடங்கு சட்டம் எப்படி இருக்கும் என்று பார்த்ததில்லை. வெடிகுண்டு வெடிப்பில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும், பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே இதைச் செய்ய முடியும்," என்றார்.
இன்று கேடா பகுதியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நாளை (திங்கள்கிழமை) கட்ச்சின் அஞ்சார், ஜாம்நகரின் கோர்தன்பர் மற்றும் ராஜ்கோட், பாவ்நகரின் பாலிதானா ஆகிய இடங்களில் பேரணிகளில் உரையாற்றுகிறார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது, அதன் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றுதான் தேர்தல் நடந்து முடிந்து இருக்கும் இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுவும் அறிவிக்கப்படுகிறது.
