GST inauguration in parliament

நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) வரவேற்க நாடாளுமன்றம் தயாராகிவிட்டது. நாளை நள்ளிரவு இரவு நடக்கும் மிக பிரமாண்டமான நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதல் தொழிலதிபர் ரத்தன்டாட்டா வரை பங்கேற்க மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு நடந்த சுதந்திரத்தின பொன்விழாப் போன்று அல்லாமல், வட்டவடிவ சிறப்பு நாடாளுமன்றக்கூட்டத்தொடர் போன்று மத்திய அரங்கில் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன் இது போல் கடந்த 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது இதுபோன்ற விழா நடத்தப்பட்டது. அதே போன்ற மகிழ்ச்சியுடன் நடத்த மத்திய அரசு தயாராகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க பிரதமர் மோடியும், குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியும் கலந்து கொள்கிறார்கள். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எச்.டி.தேவே கவுடா, ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டோம் என்று, காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கட்சிகள், தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

நாளை நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கு நிகழ்ச்சிகள், நள்ளிரவு வரை நடக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் அப்துல் ரஹீம், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முன்னாள் தலைவர் சுஷில் குமார் மோடி, மேற்குவங்க, கேரளா மாநில முன்னாள் நிதி அமைச்சர்களான அசிம் தாஸ் குப்தா, கே.கே.மாணி ஆகியோர் வர உள்ளனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், முன்னாள் கவர்னர்கள் பிமால் ஜலான், ஓய்.வி ரெட்டி, டி.சுப்பாராவ் ஆகியோரும், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சஷிகாந்த் சர்மா, முன்னாள் தலைமை அதிகாரிகள் வினோத் ராய், டி.என். சதுர்வேதி, கே.வி. சவுத்ரி, தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைவர் நசிம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர்கள், நிதிஅயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, மெட்ரோ மென் இ. தரண், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், யு.பி.எஸ்.சி. தலைவர் டேவிட் ஆர். ஷியாமிலி, சி.பி.இ.சி. தலைவர் வனஜா என் சர்னா,ேநர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா ஆகியோர் வருகின்றனர்.

மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, கே.கே வேணுகோபால், ஹரிஸ் சால்வே, பிக்கியின்தலைவர் பங்கஜ் படேல், சி.ஐ.ஐ. தலைவர் ஷோபனா கமினேனி, அசோசெம் தலைவர்சுனில் கனோரியா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விழாவை மிகப்பெரிய அரங்கான விஞ்ஞான் பவனில் நடத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், வரலாற்று சிறப்பு மிக்க இந்த சட்டம், நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் நடத்தப்பட வேண்டும் என்பதால் இங்கு நடத்தப்படுகிறது.