Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கட்சிகளுக்கு அடுத்த ஆப்பு… மத்தியஅரசுக்கு என்.ஜி.டி. திடீர் உத்தரவு

green tribunal
Author
First Published Dec 25, 2016, 10:17 PM IST


அரசியல் கட்சிகளுக்கு அடுத்த ஆப்பு… மத்தியஅரசுக்கு என்.ஜி.டி. திடீர் உத்தரவு

தேர்தலின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொடிகள், பிவிசி பேனர்கள், பிளெக்சி போர்டுகள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும்படி மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு தேசிய கிரீன் டிரிப்யூனல் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிகிரண் சிங் என்பவர் தேசிய கிரீன் டிரிப்யூனலில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தனது மனுவில் அரசியல் கட்சிகள், தனி நபர்கள் தேர்தலில் போட்டியிடும் பொழுது பிவிசி பேனர்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டபிறகும் அந்த உத்தரவுகளை யாராவது மீறினால் அவர்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என தேசிய கிரீன் டிரிப்யூனல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ரவி கிரண்சிங் தனது மனுவில் கூறி இருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பிரதீப் சிங் ராய் கவுதம் சிங் ஆகியோர் வாதாடினார்கள். பிளாஸ்டிக் வேஸ்ட் மானேஜ்மெண்ட் விதிகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மட்டுமே பேசுகிறது. பிவிசி பொருள்கள் பிளெக்சி போர்டுகளினால் ஏற்படும் பாதிப்பு பற்றி அந்த விதிகளில் எதுவும் இல்லை. அந்த பொருள்களும் சுற்றுச் சூழலுக்கு மோசமான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.

பிவிசி பேனர்கள், போர்டுகளுக்கு பதிலாக வேறு பொருள்களைப் பயன்படுத்தலாம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய கிரீன் டிரிப்யூனலின் ஸ்வதந்திரகுமார் தலைமையிலான நீதிபதிகள் குழு தனது ஆணையை வெளியிட்டது.

தேர்தலில் பிவிசி பொருள்களைப் பயன்படுத்துவதை சுற்றுச் சூழல் அமைச்சகம் தடை செய்ய வேண்டும். குளோரின் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களையும் தடை செய்ய வேண்டும்.

தடை செய்வது சாத்தியமில்லை என்றால் ஒழுங்குபடுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். ஆறு மாதத்திற்குள் இதனை சுற்றுச் சூழல் அமைச்சகம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்வதந்திரகுமார் தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவு வெளியிட்டது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios