கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநில அரசியல் தலைவர்கள் கட்சி பாகுபாடுகளை மறந்து மக்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலாவுடன் இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. பலராலும் பாராட்டப்பட்டது. 

தற்போது கேரளாவில் மழையின் அளவு மெல்ல மெல்ல குறைந்துள்ளது. வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் அரசியல் சண்டை துவங்கியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு மாநில அரேச காரணம் என்று சென்னிதாலா குற்றம்சாட்டியுள்ளார். முறையாக அணைகள் பராமரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். 

அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மையால் கேரள மாநிலம் இந்த மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு முன்னறிவிப்பின்றி அணைகள் திறந்து விட்டதாலேயே மக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகினர். 1924-ஐ விட தற்போது குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஒக்கி புயலில் இருந்தே பாடம் கற்க கேரள அரசு தவறி விட்டது என குற்றம்சாட்டியுள்ளார். நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் கூறுகையில் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. அதற்கு பதிலாக அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளில் தோள் கொடுப்பது தான் அரசியல் கட்சிகளுக்கு அழகு என்றார்.