சரியாகச் செயல்படாத அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைத்து நிர்வகிக்கலாம். அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு திட்டத்துடன் இத்தகைய பள்ளிகளை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

செயல்திட்டம்

சமீபத்தில் மத்திய அரசுக்கு 3ஆண்டுகளுக்கான செயல் திட்டம் குறித்து நிதி ஆயோக் அறிக்கை அளித்து இருந்தது. அந்த அறிக்கையில் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளை தனியார் எடுத்து நடத்தும் போது, ஒவ்வொரு குழந்தைக்கு தனியாக நிதி அளிக்க வேண்டும்.

]

பள்ளிகள் உயர்வு, தரம் குறைவு

கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டுவரை அரசு பள்ளிகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டு புள்ளி விவரப்படி, 3.7 லட்சம் அரசு பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் இயங்கி வருகிறது எனத் தெரியவருகிறது. இது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளில் 36 சதவீதமாகும்.

3 ஆண்டுகள்

இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான அதாவது 2017 முதல் 2020ம் ஆண்டுக்கான செயல்திட்டம்குறித்து நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு சமீபத்தில் அறிக்கை அளித்தது. அதில் கூறியிருப்பதாவது-

எண்ணிக்கை குறைவு

கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின்  அளவு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.அதேசமயம், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காரணங்கள்

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக அளவு விடுமுறை எடுப்பது, வகுப்பு அறைகளில் மாணவர்களுக்கு குறைந்த நேரமே பாடம் எடுப்பது, குறைந்த கல்வித்தரம் ஆகியவை அரசு பள்ளிகள் தரம் குறைந்து, மாணவர்கள் சேர்க்கை குறையக் காரணம்.  இதனால், தனியார் பள்ளிகளில் படித்து முடித்து வரும் மாணவர்கள் திறன் மிகுந்தவர்களாக வருகிறார்கள். அதேசமயம்,  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரம் மோசமாக இருக்கிறது.

சோதனை திட்டம்

மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒரு செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் தனியார், அரசு பங்களிப்புடன் பள்ளிகளை விருப்பப்பட்ட மாநிலங்களில் நடத்த வேண்டும். அரசுப்பள்ளிகளை தனியார் ஏற்று நடத்தும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும், செலவுகளையும் தீர்க்க இந்த நிதி பயன்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.