பிரதமர் மோடி செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிட்டது முதல், நவம்பர் 30-ந்தேதி வரை ஐதராபாத் நகரில் மட்டும் ரூ. 2 ஆயிரத்து 700 கோடிக்கு தங்கம் விற்பனை நடந்துள்ளது.
இந்த 22 நாட்களில் மட்டும் ஐதராபாத் தங்க விற்பனையாளர்கள் 8 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளனர்.
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் கோடிக்கணக்கில் தங்கம், வைரங்களை வாங்கிக் குவித்தனர்.
இந்நிலையில், ஒவ்வொரு நகரங்களிலும் தங்கம் விற்பனையான விவரத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஐதராபாத்தில் மட்டும் நவம்பர் 8-ந்தேதியில் இருந்து 30ந்தேதி வரை, 8 டன் தங்கதத்தை அங்குள்ள நகை விற்பனையாளர்கள் இறக்குமதி செய்து, ரூ.2 ஆயிரத்து 700 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், “ டிசம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மட்டுமே ஐதராபாத் நகருக்கு 1500 கிலோ தங்கம் வந்துள்ளது. இதில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வெளியான பின் நவம்பர் 8-ந்தேதி முதல் 30ந்தேதிவரையில், 8 டன் தங்கம், அதாவது, ரூ.2,700 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாதில் உள்ள முசாதிலால் எனும் நகைக்கடை அதிபர் மட்டும் ரூ.100 கோடிக்கு நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் தங்கம் விற்பனை செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில், 5,200 வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்கூட்டியே பணம் பெற்று இருந்ததாக கூறியுள்ளார். இந்த பணத்தை 4 முக்கிய வர்த்தகர்கள் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
இது குறித்து நகைக்கடையின் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தோம். ஆனால், நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.
