இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே, நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிடிபி பற்றி பேசுபவர்கள் எல்லாம் தவறானவர்கள். நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். ஜிடிபியைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம் என கூறினார்.

மேலும், ஜிடிபி என்பது கடந்த 1934-ம் ஆண்டுதான் வந்தது. அதற்கு முன் எந்தவிதமான ஜிடிபியும் இல்லை. பொருளாதார வல்லுநர் குஸ்நெட் கூறுகையில், ஜிடிபியை பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்று நம்பத்தேவையில்லை. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாக ஜிடிபி இருக்காது என தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர். ப.சிதம்பரம் பொருளாதாரம் குறித்தும் மத்திய செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேச்சு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் ஜிடிபி புள்ளி விவரங்கள் நம்முடைய நாட்டுக்குத் தொடர்பில்லாதது. தனிநபர் வருமான வரியை நீக்க வேண்டும், இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். இதுதான் பாஜகவின் பொருளாதார சீர்திருத்த ஆலோசனைகள் ஆகும். இந்தியப் பொருளாதாரத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.