தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்தும், கர்நாடகத்தில் கம்பளா போட்டிக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்பட்டதை கண்டித்தும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடை

தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று இந்திய விலங்குகள் நல வாரியத்தோடு இணைந்து,பீட்டா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்று இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் இளைஞர்கள் தன் எழுச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக அவசரச்சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தியது.

கம்பளாவுக்கு எதிர்ப்பு

இதேபோல, கர்நாடக மாநிலத்திலும் பாரம்பரிய எருமை மாட்டுப்பந்தயமான கம்பளா போட்டிக்கு எதிராக பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை பெற்று இருந்தது.

தமிழகத்தில் அவசரச்சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் கம்பளா போட்டிக்கு ஆதரவாக கடந்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

முடிவு

இந்நிலையில், ஜல்லிக்கட்டு, கம்பளா போட்டியையும் நடத்த கொண்டு வரப்பட்ட மசோதாக்கள் சட்டத்துக்கு விரோதமானவை எனக்கூறி, அதை எதிர்த்து பீட்டாஅமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.

வழக்கு

இது குறித்து பீட்டா அமைப்பின் விலங்குகள் நல விவகாரங்களின் இயக்குநர்மணிலால் வலையாட்டே கூறுகையில், “ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்திலும், கம்பளா போட்டிக்கு ஆதரவாக கர்நாடகத்திலும் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம்.

அது கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ என்பதை முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் முடிவு எடுப்போம். எங்களின் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து இது தொடர்பாக விரைவில் அறிவிப்போம்'' எனத் ெதரிவித்தார்.