G20 Meeting: பருவநிலை மாற்றம், போர் உலக நாடுகளின் நிர்வகத்திறன் தோல்வியைக் காட்டுகிறது: பிரதமர் மோடி ஆதங்கம்!!
கடந்த காலங்களில் நிகழ்ந்த நிதி நெருக்கடி, பருவநிலை மாற்றம், தொற்றுநோய், தீவிரவாதம், போர் ஆகியவற்றை பார்க்கும்போது உலக நாடுகளின் நிர்வாகத்திறமை தோல்வி அடைந்து இருப்பதைக் காட்டுவதாக பிரதமர் மோடி இன்று ஆற்றிய ஜி 20 மாநாட்டில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜி20 மாநாட்டுக்கு முன்னெடுப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது. ராஷ்டிரபதி பவனில் நடந்து வரும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒற்றுமை நோக்கத்திற்கான அவசியம் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்கான அவசியத்தை ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் உணர்த்துவதாக உள்ளது. நிர்வாகத்திறன் தோல்வியால் வளர்ந்து வரும் நாடுகள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய நிர்வாகத்தின் கட்டமைப்பு இரண்டு செயல் நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்டது. முதலில் போர்களைத் தடுப்பது, இரண்டாவது பொதுவான நலன்களில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது. ஆனால். இந்த இரண்டிலுமே நாம் தோல்வி அடைந்து இருக்கிறோம். நிதி நெருக்கடி, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் போர் என உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுவான மற்றும் உறுதியான நோக்கங்களை அடைவதற்கான அவசியத்தை இன்றைய கூட்டம் உணர்த்தும் என்று நம்புகிறேன். உலகின் தெற்குப் பகுதியில் இருந்து இதற்கான குரல் ஒலிக்க வேண்டும்.
அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்காமல் உலகளாவிய தலைமையை எந்தக் குழுவும் ஏற்க முடியாது. நீங்கள் காந்தி மற்றும் புத்தரின் தேசத்தில் இருக்கும்போது, இந்தியாவின் நாகரீக நெறிமுறைகளில் இருந்து உத்வேகம் பெற உங்களை கேட்டுக் கொள்கிறேன். நம்மைப் பிரிப்பது எதுவோ அதில் கவனம் செலுத்தாமல், நம்மை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
இதற்கிடையில், பூகம்பத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கூட்டத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து ஜெய்சங்கர் பேசுகையில், ''இந்தக் குழுவானது ஒரு விதிவிலக்கான பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நாம் ஒரே மாதிரி சிந்திக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள் உள்ளன. ஆனால், உலகின் இன்றைய நிலையை கவனத்தில் கொண்டு பொதுவான தளத்தை நாம் கண்டறிய வேண்டும். இதைத்தான் இன்றைய உலகமும் எதிர்பார்க்கிறது. எதிர்காலத்தில் நாம் எவ்வாறு ஒன்றிணைவது, வலுப்படுத்துவது என்பதில்தான் உலகத்தின் மாற்றமும் அமைந்து இருக்கிறது'' என்றார்.
Breaking: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பாஜக
மேலும் அவர் பேசுகையில், ''ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அது இன்றைய அரசியலையோ, பொருளாதாரத்தையோ, மக்கள் தொகை மற்றும் எதிர்பார்ப்புகளையோ பிரதிபலிக்கவில்லை. இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் உணவு, உரம் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு ஆகிய சவால்களும் அடங்கும்.
இந்தியா 78 நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்துள்ளது. நாட்டின் உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் தேவைக்கான உந்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாம் உறுதி செய்ய வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அளிக்க வேண்டும்," என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இன்றைய ஜி20 கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகளவில் அதிகம் பேரால் விரும்பப்படும் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன் என்று இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலனி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா வந்திருக்கும் இவருக்கு ராஷ்டிர பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.