ரூபாய் நோட்டு தடை மூலம் நாட்டில் ஊழலை ஒழிக்க நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றியே காட்டுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

உத்தரப் பிரதசேதத்தின் 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

இதுவரை 262 தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5-வது கட்டத் தேர்தலுக்காக இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள கோண்டா மாவட்டத்தில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது-

ஆதரவு

நாட்டில் ஊழலை வேறொடு ஒழிக்க வேண்டும் என்ற முனைப்போடு பாரதியஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியை தோல்வி அடையச் செய்தனர்.

நெற்றிக் கண்ணில் தீர்ப்பு
அதுமட்டுமல்லாமல் ஒடிசா, சண்டிகர், குஜராத் பஞ்சாயத்து தேர்தல் என அனைத்திலும் பாரதிய ஜனதா கட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் தங்களின் ‘நெற்றிக்கண்’ மூலம் நல்லது எது?, கெட்டது எது? என அறிந்து வெற்றியை அளித்துள்ளார்கள். மக்கள் தொடர்ந்து எங்களுக்கு வெற்றியை அளிப்பதன் மூலம் எனக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது.

உண்மையை உணர்ந்தனர்
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு மூலம் ஊழலுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறேன். நாட்டை தவறாக வழிநடத்திய சக்திகள் ஒழிக்கப்பட்டன.

நான் எடுத்த நடவடிக்கையால் முலாயம்சிங் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியில் எனக்கு எதிராக திரண்டுவிட்டன. ஏழைகள் இந்த உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கான்பூர் ரெயில் விபத்தில் சதி

கான்பூரில் கடந்தஆண்டு நவம்பர் 20ந்தேதி தேகாத் மாவட்டத்தில் இந்தூர்-பாட்னாரெயிலின் 14 பெட்டிகள் விபத்துக்குள்ளானது இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “ நூற்றுக்கணக்கான மக்கள் பலியான கான்பூர் ரெயில் விபத்தில் சதி நடந்துள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து சிலர் இந்த சதிச்செயலை நடத்தியுள்ளனர்.

எல்லைக்கு அப்பால் இருக்கும்எதிரிகள் இந்த செயலை நடத்தி இருந்தால், அது கோண்டாவில் நடக்க வேண்டிய அவசியமில்லை. கோண்டா மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்களையும், தேசபக்தி உள்ளவர்களையும் தேர்வு செய்வது அவசியம்.

இந்த தேர்தலில் எந்தவிதமான தவறும் நடக்கக்கூடாது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்தவிதமான வாக்குகளும் சென்றுவிடாமல் பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்க வேண்டும்'' என்றார்.