டெல்லியில் ஓடும் ரயிலில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. நாட்டின் தலைநகரத்திலேயே இந்த நிலையா? என மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதன்பிறகும் அதுபோன்ற பல அத்துமீறல்கள் நாடு முழுவதும் அரங்கேறி கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது டெல்லியில் அதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. டெல்லி சஹரம்பூர் பயணிகள் ரயில் பாரத்திலிருந்து ஷாம்லிக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் 16 வயதுடைய 9ம் வகுப்பு மாணவி ஒருவர், தேர்வு முடிவை தெரிந்துகொண்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த மாணவியும் அவரது உறவினரும் சென்றுள்ளனர். அவர்கள் இருந்த பெட்டியில் அவர்களை தவிர மூன்று இளைஞர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அந்த மூவரும் மாணவியின் உறவினரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வீட்டிற்கு சென்றதும் இதுதொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவனை கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

டெல்லியில் ஓடும் ரயிலில் மீண்டும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வியை மேலும் வலுவாக்கியுள்ளது.