வழக்கமான பரிசோதனைகளை அடுத்து, மாணவியின் ஹால் டிக்கெட்டை சரி பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் அனுஸ்ரீயை கல்லூரியின் தேர்வு அறை ஒன்றில் தேர்வு எழுத அனுமதித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத சென்ற மாணவி, தேர்வு எழுதிய அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மைசூரு மாவட்டத்தின் டி நரசிபூர் பகுதியில் அமைந்துள்ள வித்யோதயா கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத மாணவி அனுஸ்ரீ சென்றுள்ளார். தேர்வு மையத்தில் வழக்கமான பரிசோதனைகளை அடுத்து, மாணவியின் ஹால் டிக்கெட்டை சரி பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் அனுஸ்ரீயை கல்லூரியின் தேர்வு அறை ஒன்றில் தேர்வு எழுத அனுமதித்தார். 

கண்காணிப்பு:

மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அனுஸ்ரீயும் தனது தேர்வை மும்முரமாக எழுதி கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், அனுஸ்ரீ தேர்வு மையம் மாறி வந்து தேர்வு எழுதி கொண்டிருக்கிறார் என்பதை தேர்வு கண்காணிப்பாளர் அறிந்து கொள்கிறார். இதை அடுத்து பாதி தேர்வை எழுதி கொண்டிருந்த அனுஸ்ரீயிடம் திடீரென விரைந்து வந்த தேர்வு கண்காணிப்பாளர், அனுஸ்ரீக்கு வழங்கப்பட்டு இருந்த விடைத்தாள் மற்றும் வினா தாள் உள்ளிட்டவைகளை பரித்துக் கொண்டார். 

பரபரப்பு:

தேர்வு கண்காணிப்பாளரின் செயலால் அதிர்ந்து போன அனுஸ்ரீக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு மைய கண்காணிப்பாளர் அனுஸ்ரீயிடம் அவர் தேர்வு மையம் மாறி வந்துள்ளதாக கூறி, உடனடியாக சரியான தேர்வு மையத்திற்கு சென்று பரீட்சையை எழுத கண்காணிப்பாளர் மிக கூலாக பதில் அளித்து இருக்கிறார். இதை அடுத்து அதிர்ச்சியில் வேறு தேர்வு மையத்திற்கு செல்ல முற்பட்ட மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தேர்வு மையத்தில் கண்காணிப்பாளரின் கவன குறைவு காரணமாக மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கண்டனம்:

அனுஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து பலரும் தேர்வு கண்காணிப்பாளரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்வு கண்காணிப்பாளரின் அலட்சியம் மட்டும் தான் அனுஸ்ரீ உயிரிழப்புக்கு காரணம் என தலித் சங்கர்ஷா சமிதி மாவட்ட அழைப்பாளர் அலகுடு சிவகுமார் தெரிவித்தார். 

"அனுஸ்ரீ நன்கு படித்து மாவட்ட ஆணையர் ஆகவே விரும்பினார். அவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்," என அனுஸ்ரீயின் உறவினர் மகேஷ் தெரிவித்தார். மாணவி உயிரிழப்பு குறித்து கருத்து கூறிய கல்வி அலுவலர் மாரிசுவாமி, விதிகளின் படி மாணவியை அதே விடை தாளுடன் பரீட்சை எழுத அனுமதி அளிக்க முடியாது. மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைக்காக கல்வி துறை அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.