small Girl Begged Father For Money To Treat Cancer
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் கேட்டு தனது தந்தைக்கு வீடியோ மூலம் செய்தி அனுப்பியும், அவர் வீட்டை விற்க சம்மதிக்கவில்லை. இதனால், அந்த சிறுமி கடந்த 14-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சிறுமி இறந்தபின், தனது தந்தைக்கு அனுப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வௌியாகி, வைரலாகப் பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சாய் (வயது13). இவரின் தந்தை சிவக்குமார், தாய், சுமா. சாய் பிறந்ததில் இருந்து சிவக்குமாரும், சுமாயும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சிவக்குமார் பெங்களூருவிலும், சுமா தனது மள் சாய்யுடன் விஜயவாடாவில் தனது தாய்வீட்டிலும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி சாய் க்கு உடல்நலக்கு குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, சாய்க்கு ரத்தப் புற்று நோயும், எலும்பு மஜ்ஜை புற்று நோயும் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்காக சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் சுமாயிடம் தெரிவித்தனர். இதையடுத்து, விஜயவாடாவில் மகள் சாய் பெயரில் இருக்கும் வீட்டை விற்க சுமா முடிவு செய்தார். இது தொடர்பாக பிரிந்து வாழும் தனது கணவர் சிவக்குமாரிடம் பேசியபோது, அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து, சாய்யின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, சாய் கடந்த 14-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது தந்தைக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்து, சிகிச்சைக்கு பணம் கேட்டு சாய் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த வீடியோ இப்போது வௌியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாய் பேசுகையில், “ டேடி,உங்ககிட்ட பணம் இல்லைனு சொன்னீங்க. ஆனா, நம்மகிட்ட வீடு இருக்கு. தயவு செய்து அந்த வீட்டை விற்று, எனது சிகிச்சைக்கு உதவுங்க டேடி. நான் அதிகமான நாட்கள் வாழமாட்டேன் என டாக்டர்கள் சொல்லிட்டாங்க. ஏதாவது செய்து, என்னை காப்பாற்றுங்கள் டேடி.
நான் பலமாதங்களாக ஸ்கூலுக்கு போகல டேடி. என் பிரண்ட்ஸ் கூட நான் விளையாடனும் போலிருக்கு. என் சிகிச்சை முடிந்துவிட்டால், நான் சந்தோஷமா மறுபடியும் ஸ்கூலுக்கு போவேன். என் கையெல்லாம் காயமாக இருக்கு, எனக்கு சிகிச்சை வேணும் டேடி. அம்மாகிட்ட பணம் இல்லையாம். உங்க பணத்தை அம்மா எடுத்துக்கொள்வார்கள் என நீங்கள் நினைத்தால், நீங்கள் என்னை டாக்டரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள் டேடி’’ என உருக்கமாக தெரிவித்தார்.
இப்போது இந்த வீடியோ விஜயவாடாவின் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.
சாய்யின் தாய் சுமா கூறுகையில், “ நான் எனது மகளின் சிகிச்சைக்காக வீட்டை விற்பனை செய்ய முயன்றபோது, அந்த வீட்டை விற்கவிடாமல் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. போன்டா உமாமகேஷ்வர ராவ் மூலம் எனக்கு எனது கணவர் மிரட்டல் விடுத்து வீட்டை யாரும் வாங்க விடாமல் தடுத்துவிட்டார். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்தும், அந்த புகாரை போலீசார் வாங்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சாய் க்கு வீடியோவை பார்த்த ‘பலால ஹக்குல சங்கம்’ எனும் தனியார் தொண்டு நிறுவனத்தின் அச்சுதா ராவ் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்தார். இதையடுத்து, ஜூல 20-ந்தேதிக்குள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்க தாக்கல் செய்ய விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
