கடந்த 2011-ம் ஆண்டில், எல்லையில் இரு இந்திய வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச்சென்ற பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர்களுடைய 3 வீரர்களின் தலையை துண்டித்து எடுத்து வந்த இந்திய வீரர்களின் ‘ஆபரேஷன் ஜிஞ்சர்’ நடவடிக்கை குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’
சமீபத்தில் உரி ராணுவ தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ‘துல்லிய மின்னல்’ தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தினார்கள்.இதில், அந்தப் பகுதியில் ெசயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த ராணுவ நடவடிக்கையை ஆளும் பா.ஜனதா, அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
‘ஆபரேஷன் ஜிஞ்சர்’
ஆனால், இது போன்று ஏற்கனவே இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் ஜிஞ்சர்’ ( ஆபரேஷன் இஞ்சி) நடவடிக்கை குறித்து புலனாய்வு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியர்களை தலை நிமிரச்செய்யும், நமது ராணுவத்தின் மெய் சிலிர்க்க வைக்கும் ‘‘தலைக்கு தலை’’ வாங்கும் பதிலடி நடவடிக்கையை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் எஸ்.கே.சக்கரவர்த்தி, திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஆவார்.
இரு வீரர்கள் தலை துண்டிப்பு
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பகலில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், குகல்தார் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ நிலை மீது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது இரு இந்திய வீரர்களான ‘ஹவில்தார்’ ஜெய்பால்சிங் அதிகாரி மற்றும் ‘லேன்ஸ் நாயக்’ தேவேந்தர்சிங் ஆகியோரை கொலை செய்து அவர்களுடைய தலையை துண்டித்து தங்களுடன் எடுத்துச் சென்றுவிட்டனர்.

25 கமாண்டோ வீரர்கள்
இதற்குப் பழிக்குப் பழியாகத்தான் ‘ஆபரேஷன் ஜிஞ்சர்’ நடவடிக்கை இந்திய ராணுவத்தினரால் திட்டமிடப்பட்டது. இதற்காக எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் ‘போலீஸ் சவுக்கி’ என்ற இடம், அதிரடி தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டது.
நீண்ட நாள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு, ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி அதிரடி தாக்குதலை அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக திறமையான இளம் வீரர்கள், குறிப்பாக கமாண்டோ வீரர்கள் 25 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு, தாக்குதல் குறித்து துல்லியமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அதிகாலையில்..
ரகசியமான இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கும் இடத்திற்கு முந்தின நாள் (29-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கே அனைத்து வீரர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். இரவு 10 மணி வரை அவர்கள் அந்தப் பகுதியில் மறைந்து இருந்தனர்.
அதன்பின் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தானின் போலீஸ் சவுக்கி ராணுவ நிலைக்கு மிக அருகில் அதிகாலை 4 மணிக்கு (ஆகஸ்டு 30-செவ்வாய்) போய்ச் சேர்ந்தனர்.
கண்ணி வெடிகள்
அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்தப் பகுதியில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துவிட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் மறைந்து இருந்தனர்.காலை 7 மணி அளவில், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்கு அருகே பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர், இளநிலை அதிகாரி ஒருவருடன் வந்து கொண்டு இருந்ததை நமது வீரர்கள் பார்த்தனர்.
குண்டு வீச்சு-துப்பாக்கிச் சூடு
சரியான இலக்கை அவர்கள் அடைந்ததும், மறைந்திருந்த நமது வீரர்கள் கண்ணி வெடிகளை வெடிக்கச்செய்தனர். எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டனர்.உடனே அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய நமது வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் அருகில் இருந்த ஓடையில் விழுந்தார்.
3 பேர் தலை துண்டிப்பு
அப்போது விரைந்து சென்ற இந்திய வீரர்கள் மற்ற 3 வீரர்களின் தலையை வாளாள் துண்டித்து தனியே எடுத்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதம், பெயர் மற்றும் வகித்த பதவி குறித்த அடையாளங்களையும் பறித்து எடுத்துக்கொண்டனர்.
பின்னர் தலையற்ற வீரர் ஒருவரின் உடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை மறைத்து வைத்தனர். இதற்கிடையில் தாக்குதல் சத்தம் கேட்டதும் முகாமில் இருந்து மேலும் இரு வீரர்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
சுட்டுக் கொலை
அப்போது, அடுத்த வரிசையில் மறைந்திருந்த நமது 2-வது அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றனர். உடனே மேலும் இரு வீரர்கள் நமது 2-வது அணியினரை சுற்றி வளைக்க முயன்றனர்.
அப்போது அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்ட நமது 3-வது அணி வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டனர். தாக்குதல் இலக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு நமது வீரர்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர்.
45 நிமிடங்களில்
அப்போது, முகாமில் இருந்து மேலும் சில வீரர்கள் தாக்குதல் நடந்த இடத்தை ேநாக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்ேபாது பலத்த குண்டு வெடிப்பு சத்தம் (பாக் வீரரின் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு) கேட்டது.
இந்த குண்டு வெடிப்பில் மேலும் 2 அல்லது 3 வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. 45 நிமிடங்களில் ‘ஆபரேஷன் ஜிஞ்சர்’ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துக்ெகாண்டு நமது சாதனை வீரர்கள் 7.45 மணிக்கு அங்கிருந்து திரும்பினார்கள்.
தலை துண்டிக்கப்பட்ட வீரர்கள்
வீரர்களின் முதல் அணி 12 மணிக்கும், கடைசி அணி 2.30 மணிக்கும் இந்திய பகுதி முகாமுக்கு வந்து சேர்ந்தனர். எதிரி மண்ணில் அவர்கள் 48 மணி நேரம் தங்கி இருந்து ‘தலைக்கு தலை’ வாங்கி உள்ளனர்.
இந்த அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். துண்டிக்கப்பட்ட தலைக்கு சொந்தக்காரர்கள் வீரர்கள் சுபேதார் பர்வேஸ், ஹவில்தார் அப்தாப், நாயக் இம்ரான் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டது.
‘எக்காளமிட்ட பாகிஸ்தானியர்
(இரு இந்திய வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற பாகிஸ்தானியர்கள், இரு தலைகளையும் ஒரு மேடையில் வைத்து, அதை சுற்றி வந்து எக்காள கோஷங்களை எழுப்பினார்கள்.
தலை துண்டிப்புக்கு சில நாட்கள் கழித்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ‘வீடியோ கிளிப்’ ஒன்று கைப்பற்றப்பட்டது.அதில், துண்டிக்கப்பட்ட இரு இந்திய வீரர்களின் தலையை சுற்றி வந்து கோஷமிட்ட பாகிஸ்தானியர் பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
ராணுவத்தினரை ஆக்ரோஷப்படுத்திய இந்தக் காட்சிதான், ‘தலைக்கு தலை’ வாங்கும் இந்தியாவின் பதிலடி நடவடிக்கையை துரிதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்ஜானுக்கு முந்தைய நாளில்...
`ஒரு தலைக்கு 3 தலை' வாங்கிய இந்திய ராணுவத்தின் ‘இஞ்சி நடவடிக்கை (ஆபரேஷன் ஜிஞ்சர்), ரம்சான் பண்டிகைக்கு முந்தைய நாளில் நடைபெற்றது.
பாகிஸ்தான் வீரர்களின் பதிலடி தாக்குதல், பண்டிகை உற்சாக மன நிலையில் மிகவும் குறைவாக இருக்கும் என்ற கணிப்பினால், இந்த நாள் தேர்வு செய்யப்பட்டதாக, ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதைக்கப்பட்ட தலைகள் தோண்டி எடுத்து எரிப்பு
(பாக்ஸ்)
பாகிஸ்தான் வீரர்களின் துண்டிக்கப்பட்ட தலைகள் இந்தியா கொண்டு வரப்பட்டதும், மூத்த அதிகாரிகளின் உத்தரவுப்படி புகைப்படம் எடுக்கப்பட்டு, பின்னர் புதைக்கப்பட்டன. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு மூத்த அதிகாரி வந்து பாகிஸ்தான் வீரர்களின் தலைகள் குறித்து கேட்டார். புதைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கோபம் கொண்டார். தலைகளை தோண்டி எடுத்து எரித்து, சாம்பலை கிருஷ்ண கங்கா நதியில் வீசி எறியும்படியும், இதன் மூலம் எந்த மரபணு தடயமும் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார். அதன்படி நாங்கள் செய்தோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த ராணுவ நடவடிக்கையின்போது, இந்திய வீரர் ஒருவரின் கைவிரல்கள் கண்ணி வெடியால் துண்டிக்கப்பட்டதைத் தவிர வேறு சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
