மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும், கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், தன் தங்கையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து அக்காவை தொடர்பு கொள்ள முயன்ற போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து மருத்துவரைத் தேடி வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் அப்பெண் உடல் இருந்தது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியது. பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியே அடங்காத நிலையில், அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் எரிக்கப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா கொலை செய்யப்பட்ட ஷம்ஷாபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

அந்த பெண், பிரியங்காவை போலவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா? பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருப்பதால், ப்ரியங்காவை கொன்றவர்களே இந்த பெண்ணையும் கொன்றிருக்கலாமா? என்ற சந்தேகங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.