ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 மாநாட்டுக்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தால் ஏரியில் ஷிகாரா சவாரி சென்று மகிழ்ந்தனர்.
ஸ்ரீநகரில் ஜி 20 மாநாடு நடந்து வருகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். திங்கள் கிழமை துவங்கிய இந்த மாநாடு புதன் கிழமை (நாளை) நிறைவு பெறுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் Sher-e-Kashmir சர்வதேச மாநாட்டு மையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் வருவதால் ஸ்ரீநகரில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வழக்கம்போல் கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாடு இங்கு நடப்பது பல்வேறு வழிகளில் ஜம்மு காஷ்மீருக்கு வர்த்தக ரீதியில் பயனளிக்கும் என்றும், வளர்ச்சிக்கு உதவும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜி 20 மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீரிலும், லடாக் பகுதியிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று பிரதிநிதிகள் தால் ஏரியில் ஷிகாரா சவாரி சென்று மகிழ்ந்தனர். அவர்களுக்கு இந்தப் பயணம் புது அனுபவத்தை அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
