ஆந்திர மாநிலத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு பேச வேண்டும் என கூறிய பெண் ஒப்பந்த ஊழியரை அரசு சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தாக்கிய வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

.

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தனித்திரு, விழித்திரு, சமூக இடைவெளியை கடைபிடி என்றெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், நெல்லூரில் மாநில சுற்றுலாத்துறை விடுதியில் துணை மேலாளராக இருப்பவர் பாஸ்கர் ராவ் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலா துறை விடுதி துணை மேலாளரான பாஸ்கரராவ், அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்ப்பவர் உஷாராணியுடன் வேலை விஷயமாக  பேசிக் கொண்டிருந்த போது மாஸ்க் அணிந்துவிட்டு பேசுங்கள் என பாஸ்கர் ராவிடம் உஷாராணி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர்  ராவ், அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே உஷாராணியின் தலைமுடியை பிடித்து அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் அந்த  பெண் அலறித் துடித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார், பாஸ்கர் ராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.