2018ம் ஆண்டில் இருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் முழுமையாக ஆன்-லைனில் மூலமாகவே நடத்தப்படும். இதன் மூலம் நிர்வாகம் செய்வதும், மதிப்பீடு செய்வதும் எளிதாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. .

ஐ.ஐ.டி. சேர்க்கை குறித்த கொள்கையை வகுக்கும் இணை நிர்வாக வாரியம்(ஜே.ஏ.பி.)  சென்னையில் நேற்று முன்தினம் கூடி, இந்த முடிவை எடுத்தது. தேர்வு செய்யப்பட்ட மையங்களில் ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும், மாணவர்கள் பென்சில், பேனாக்கள் மூலம் பதில் அளிப்பதற்கு பதிலாக கம்ப்யூட்டர் மூலம் பதில் அளிப்பார்கள்.

தற்போது நுழைவுத் தேர்வு வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள்  அனைத்தும் ஓ.எம்.ஆர். தாள்களில் பென்சில் அல்லது பேனா மூலம் கோடிடப்பட்டு எந்திரங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஐ.ஐ.டி. சென்னை மற்றும் ஜே.ஏ.பி. தலைவருமான பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

2018ம் ஆண்டிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு ஆன்-லைன் மூலமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.

ஜே.இ.இ. எனப்படும் இணை நுழைவுத் தேர்வின் மெயின் தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்று மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ. மெயின் தேர்வை 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 10 சதவீதத்துக்கு குறைவானவர்களே ஆன்-லைனில் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜே.ஏ.பி. உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ எளிதாக நிர்வாகம் செய்யவும், பதில் அளிக்கும் தாள்களை மதிப்பிடுவதை எளிதாக்கவும் ஆன்-லைனில்மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பில்இருந்தே ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்த கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பத அவசியம்’’ என்றார்.