ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை செப்டம்பர் இறுதிவரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி ஏழைப் பெண்களின் வசதிக்காக இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதான் மந்திரி உஜ்வால யோஜனா என்னும் பெயரில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தின்படி இதுவரை 2.6 கோடி இலவச இணைப்புகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. 

 இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் எண்ணை வழங்கவேண்டும் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆதார் இல்லாதவர்கள் மே மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கால அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த கால அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது.

 இந்நிலையில், இலவச சமையல் எரிவாயு இணைப்புக்காக, ஆதார் பெற விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை செய்ய மாநில அரசுகளுக்கு சொந்தமான சில்லரை எரிவாயு வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

 இத்திட்டத்தின்படி ஒரு ஆண்டிற்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.